தேவை ஏற்படும் போது தைரியமும், விடாமுயற்சியும் வெற்றியை தேடித் தரும்!

0
379

உலகில் உள்ள பெரிய, பெரிய நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டுக்கு அருகில் உள்ள குட்டி, குட்டி தீவுகள் மீது போர்தொடுத்து அவற்றை ஆக்கிரமிக்க தொடங்கிய காலகட்டம். ஒரு கப்பலில் 500 வீரர்களை அனுப்பி 500 பேர் மக்கள்தொகை கொண்ட ஆதிவாசிகள் வாழ்கின்ற ஒரு தீவை கைப்பற்ற அனுப்பினார்கள். கப்பல் தீவை சென்றடைந்தது, சிலநாட்களில் திரும்பிவந்தது. 500 வீரர்களும் கை,கால் உடைந்த நிலையில் தோற்றுப்போய், திரும்பி வந்தார்கள், ஆதிவாசிகள் அவர்களை பின்னி எடுத்துவிட்டார்கள்.

அடுத்த நாள் 1000 வீரர்களை, கப்பலில் அனுப்பினார்கள். 1000 வீரர்களும் கை,கால் இழந்த நிலையில் பயந்து ஓடிவந்தார்கள். மீண்டும் 2000 பேரை அனுப்பினார்கள். அவர்களுக்கும் அதே கதிதான். பின் 5000 பேர்!, அவர்களுக்கும் அதே கதி இவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. வெறும் 500 ஆதிவாசிகள் ஆயுதங்களுடன் சென்ற 5000 பேரையும் தோற்கடித்து, கை,கால்களை உடைத்து திருப்பி அனுப்பிவிட்டார்களே! எப்படி முடிந்தது?, என்று தீவிரமாக யோசித்தார்கள். பின் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

இந்த முறை வெறும் 500 பேரை மட்டுமே, கப்பலில் அனுப்பினார்கள்.
இரண்டு நாள் நடந்த தீவிர சண்டையில் ஆதிவாசிகளை தோற்கடித்து வெற்றி கண்டு விட்டார்கள். 5000 பேர் சென்று, தோற்ற இடத்தில், வெறும் 500 பேர் சென்று எப்படி ஜெயித்தார்கள். இந்த முறை ஒரே ஒரு மாற்றத்தைத்தான் செய்திருந்தார்கள். 500 பேரை தீவில் இறக்கி விட்டதும் கப்பல் திரும்பிவிட்டது.

இனிமேல் இந்த தீவில் இருந்து திரும்பி செல்ல முடியாது. உயிருடன் வாழவேண்டும் என்றால், தீவை கைப்பற்றியே ஆகவேண்டும். இந்த நெருக்கடிதான் அவர்களை ஜெயிக்கவைத்தது. லட்சியத்தில் உறுதியாக இருப்பதைவிட, அதை அடைவதற்கான முயற்சியில் மிகவும் உறுதியாக இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும்.

படிக்கட்டில் இறங்கி நீச்சல் கற்றுக் கொள்பவனை விட, மேலிருந்து குதிப்பவனே எளிதில் நீந்துகிறான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here