பிரதமர் நரேந்திர மோடிக்கு 70 சதவிகித மக்கள் ஆதரவு உள்ளதாக தி மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உள்ள முக்கியமான 13 உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி தான் முதலில் உள்ளார்.
தி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் சர்வதேச அளவில் இருக்கும் முக்கிய தலைவர்களுக்கு மக்களிடம் எந்தளவுக்கு ஆதரவு உள்ளது என்பதைக் கண்டறியத் தொடர்ந்து சர்வே நடத்தும்.
அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான சர்வே முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் 70% மக்கள் ஆதரவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தில் உள்ளார். மோடிக்குப் பின், 64% மக்கள் ஆதரவுடன் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 2ஆவது இடத்திலும், இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி 63% ஆதரவுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ( 52%), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (48% ), ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (48% ), கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (45% ) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.