அன்று கசந்தது இன்று இனிக்குது

0
897

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு, டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள 500 கி,.மீ தூர சாலைப் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும். சென்னை துறைமுகம் ஈரடுக்கு பாலம் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். மதுரை, கோவை மாநகரில் வட்ட சாலை அமைக்க வேண்டும். மேலும், உழுந்துபேட்டை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் உள்ள இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். கோவையில் எல்.என்.டி கட்டுப்பாட்டில் உள்ள 22 கி.மீ இருவழிச் சாலையை நான்கு வழி சாலையாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தார். கோரிக்கைகளை பரிசீலித்து முடிவை சொல்வதாக நிதின் கட்காரியும் உறுதியளித்திருக்கிறார்.

அதில் மிக முக்கியமான கோரிக்கையாக, சென்னை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை திருச்சி வரை 8 வழியாகவும், திருச்சி – கன்னியாகுமரி இடையே 6 வழிச் சாலையாக மாற்றவும் கோரிக்கை வைத்தார். தி.மு.க அரசின் இக்கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. ஏனெனில், இதே சாலை திட்டங்களை எதிர்த்துத்தான் தி.மு.க எதிர்கட்சியாக இருந்தபோது மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தியது. தி.மு.கவின் கூட்டணி கட்சிகள் நீதிமன்றங்களை நாடி இத்திட்டத்திற்கு தடைபோட்டது. அ.தி.மு.க ஆட்சியில் புயலைக் கிளப்பிய விவகாரங்களில் இதுவும் ஒன்று.

தற்போது இதே திட்டத்தை நிறைவேற்றக்கோரி தி.மு.க அரசு மத்திய அரசிடம் மன்றாடுகிறது என்றால் இவர்களுக்கு ஆட்சியின் மீதும் இதில் கிடைக்கும் கமிஷன் மீதும்தான் பற்றே ஒழிய, மக்களின் மீது அல்ல என்பது புலனாகிறது. அன்று இதற்காக இறப்பதற்கும் தயார் என கூறி போராடிய மக்கள் இன்று போராட மட்டார்களா, அவர்கள் போராடினால் தி.மு.க அரசு என்ன நடவடிக்கை எடுக்கும், ஒருவேளை அவர்கள் இன்று போராடவில்லை என்றால் அன்று போராடியது நடிப்பு, தூண்டிவிடப்பட்டது என்றாகிவிடாதா? இதேபோல, அன்று ஈரடுக்கு மேம்பாலத்தை ‘போகாத ஊருக்கு வழி தேடும் செயல்’ என கூறி விமர்சித்த ஸ்டாலின், தற்போது முதலமைச்சராக மாறியதும் அவரின் பேச்சை மறந்துவிட்டாரா, அல்லது தற்போது அது போகும் ஊருக்கு வழி தேடும் செயலாகிவிட்டதா? இதற்கெல்லாம் தி.மு.க அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here