இந்திய குடியரசு தின விழாவிற்கு வெளிநாட்டு தலைவர்களை அழைப்பது சம்பந்தமாக தூதர்கள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. தலைவர்கள் மட்டத்தில் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு மற்றும் கொண்டாட்டங்களுக்கு, ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மூன்று நாடுகள் உட்பட ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களை, தலைமை விருந்தினராகப் அழைப்பதற்கான ஏற்பாடுகள் நடை பெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தூதர்கள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடந்துள்ள நிலையில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த ஐந்து நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் அடுத்த வார இறுதியில் – டிசம்பர் 18-19 தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்துவார்.
பேச்சு வார்த்தை பலனளித்து, கோவிட் சூழ்நிலை சாதகமாக இருந்தால், கஜகஸ்தானின் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், உஸ்பெகிஸ்தானின் ஷவ்கத் மிர்சியோயேவ், தஜிகிஸ்தானின் எமோமாலி ரஹ்மான், துர்க்மெனிஸ்தானின் குர்பாங்குலி பெர்டிமுஹமடோவ் மற்றும் கிர்கிஸ்தானின் சதிரி ஜபரோவ் ஜனவரி மாதம் வருவார்கள்.
துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவை ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.