கட்டுரை-சரோஜினி நாயுடு: நூற்றாண்டு கடந்தும் கொண்டாடப்படும் கவிக்குயில்!

0
933

21ஆம் நூற்றாண்டில் அனைத்துத் துறையிலும் பெண்கள் சாதனை புரிந்துவருகின்றனர். அரசியல், கலை, விஞ்ஞானம், சமூக சேவை என பெண்கள் கால்பதிக்காதது மட்டுமல்ல மகுடம் சூடாத துறையே இல்லை. வளர்ந்து வரும் தொழில்நுட்பமும், பரவலாக்கப்பட்ட கல்வியும் அதை சாத்தியப்படுத்தியுள்ளது. ஆனால் 19ஆம் நூற்றாண்டிலேயே பல துறைகளில் சாதனை படைத்த பெண்ணாக திகழ்ந்தவர் சரோஜினி நாயுடு.

இளமைப்பருவம்

ஹைதராபாத்தில், ஒரு பெங்காலி பிராமணர் குடும்பத்தில் பிப்ரவரி 13, 1879 அன்று பிறந்தார் சரோஜினி நாயுடு. ஹைதராபாத்திலுள்ள நிஜாம் கல்லூரியின் நிறுவனரான அவரது தந்தை அகோரநாத் சட்டோபாத்யாயா ஒரு விஞ்ஞானி, கல்வியாளர், தத்துவஞானி. சரோஜினி நாயுடுவின், தாயார் பரத சுந்தரி தேவி ஒரு பெண் கவிஞர்.

சரோஜினி நாயுடு தனது 16 வது வயதில், ஹைதராபாத் நிஜாமின் உதவியுடன் இங்கிலாந்து சென்று, லண்டனிலுள்ள கிங் கல்லூரியி படித்தார். பின்னர், கேம்பிரிட்ஜிலுள்ள கிர்டன் கல்லூரியில் பயின்றார். அங்கு அவருக்கு புகழ்பெற்ற மேதைகளுடன் அறிமுகம் ஏற்பட்டது. ஆர்தர் சைமன், எட்மண்ட் காஸ் ஆகியோருடன் சந்தித்து உரையாடினார்.
கவிக்குயில் சரோஜினி

இந்தியாவின் கருப்பொருள்களான – பெரிய மலைகள், ஆறுகள், கோவில்கள், சமூகச் சூழல், போன்றவற்றை ஒட்டி கவிதை எழுதுமாறு காஸ் சரோஜினிக்கு அறிவுரை கூறினார். சரோஜினி நாயுடுவின் தி கோல்டன் த்ரேஷோல்டு (1905), தி பார்ட் ஆஃப் டைம் (1912), தி ப்ரோகேன் விங் (1912) ஆகிய படைப்புகள் இந்திய மற்றும் ஆங்கில வாசகர்களை ஈர்த்தது.

திருமணம்

19வது வயதில் சரோஜினி நாயுடு தனது படிப்பினை முடித்த பின்னர், சாதி மறுப்பு திருமணத்துக்கு பெரும் எதிர்ப்புகள் நிலவிய காலகட்டத்தில் டாக்டர் கோவிந்தராஜுலுவைத் திருமணம் செய்தார். அது ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இருந்தாலும், சரோஜினியின் தந்தை அவரது முயற்சிக்கு முழு ஆதரவு தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் சரோஜினி

1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் போது சரோஜினி நாயுடு, இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார். இதன் மூலமாக, அவருக்கு கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநாத் தாகூர், முகமது அலி ஜின்னா, அன்னி பெசன்ட், சி.பி.ராமசுவாமி ஐயர், காந்திஜி, ஜவகர்லால் நேரு போன்ற முக்கிய தலைவர்களுடன் அறிமுகம் ஏற்பட்டது. அதன்பின் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார். காந்தி, அப்பாஸ் தியாப்ஜி மற்றும் கஸ்தூரி பாய் காந்தி ஆகியோர் கைதுக்குப் பின் தர்சண சத்தியாகிரகத்தில் துடிப்புடன் பங்கேற்றார்.
1915 முதல் 1918 ஆண்டுகளுக்கிடையில் அவர் இந்தியா முழுவதும் இளைய சமுதாயத்தினரின் நல்வாழ்வு, பணியாளர் நலன், பெண் கொடுமை மற்றும் தேசியப் பற்று குறித்து பல்வேறு சொற்பொழிவுகளை மேற்கொண்டார். ஜவகர்லால் நேருவை 1916 ஆம் ஆண்டு சந்தித்ததற்குப் பின் அவர் சம்பரன் இன்டிகோ பணியாளர்கள் பிரச்சினையைக் கையில் எடுத்தார். 1925 ஆம் ஆண்டில் அவர் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே ஆவார்.
1919 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ரௌலெட் சட்டத்தினைப் பிறப்பித்தது. இதன் வழியாக விழிப்புணர்வு ஆவணங்களை வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானதாகக் கருதப்பட்டது; மோகன் தாஸ் காந்தி அவர்கள் எதிர்த்துப் போராட ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார், இதில் முதலில் இணைந்தவர் சரோஜினி நாயுடு ஆவார்.
ஜுலை 1919 ஆம் ஆண்டு சரோஜினி அவர்கள் இங்கிலாந்திற்கான ஹோம் ரூல் லீக்கின் தூதர் ஆனார். ஜுலை 1920 இல் அவர் இந்தியாவிற்கு திரும்பினார். ஆகஸ்ட் 1 அன்று மகாத்மா காந்தி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். 1924 ஆம் ஆண்டு, கிழக்கு ஆப்பிரிக்க இந்திய காங்கிரசில் பங்கேற்ற இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுள் ஒருவராக சரோஜினி அவர்கள் திகழ்ந்தார்.
அக்டோபர் 1928 ஆம் ஆண்டு நாயுடு நியூ யார்க்கிற்கு சென்றார். அங்கு நிலவிய ஆப்ரிக்க அமெரிக்க மற்றும் அமெரிக்க இந்திய இனப் பாகுபாடுகளைக் கண்டு கவலையுற்றார். அங்கிருந்து திரும்பிய பின்னர் காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினரானார்.
ஜனவரி 26, 1930 இல் தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் கோரியது. மே 5, அன்று மோகன் தாஸ் காந்தி கைது செய்யப்பட்டார். அதன் பின் சில நாட்களிலேயே நாயுடு அவர்களும் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தி அவர்களுடன் ஜனவரி 31, 1931 இல் அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். மோசமான உடல் நிலை காரணமாக நாயுடு உடனடியாகவும் காந்தி 1933 ஆம் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டனர். 1931 ஆம் ஆண்டு அவர் காந்திஜி மற்றும் பண்டிட் மாலவியாஜி ஆகியோருடன் இணைந்து வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றார். அக்டோபர் 2, 1942 ஆம் ஆண்டு அவர் வெள்ளையனே வெளியேறு போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டார். அவர் காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். மோகன் தாஸ் காந்தி அவர்களுடன் நாயுடு அவர்கள் ஒரு பாசமான உறவினைக் கொண்டிருந்தார். காந்தி அவரை செல்லமாக “மிக்கி மவுஸ்” என்று அழைப்பார்.

பெண்கள் முன்னேற்றத்துக்கு குரல் கொடுத்த சரோஜினி

பெண்களை அடிமையாக நடத்திய இந்தியச் சூழலில் சரோஜினி தனது கல்வி மூலம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தார். அதற்கு அவரது தந்தை உட்பட பல்வேறு நபர்கள் உறுதுணையாக இருந்தனர். ஆனால் நாட்டில் கோடிக்கணக்கான பெண்கள் அடிமைப் பட்டுக்கிடப்பதைக் கண்டு சரோஜினி வெகுண்டெழுந்தார். இந்தியப் பெண்களை சமையலறையில் இருந்து வெளியே கொண்டு வந்து, அவர்களை விழித்தெழச் செய்தார். பெண்களுக்கான உரிமைகள் கிடைக்கக் கோரி, நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களுக்கும், மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டார்.

முதல் பெண் ஆளுநர்

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், சரோஜினி நாயுடு, உத்தர பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் ‘சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர்’ என்ற பெயரைப் பெற்றார். கவிக்குயில், இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட சரோஜினி நாயுடு மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here