கேன்ஸ் 75வது திரைப்பட விழா பிரான்ஸில் நடந்து வருகிறது. இவ்விழாவில் கௌரவ அழைப்பாளராக பாரதம் பங்கேற்றுள்ளது. இந்த கௌரவ அழைப்பாளர் என்ற அந்தஸ்து இந்த ஆண்டு முதல்முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது, அதில் முதல் நாடாக பாரதம் அழைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் பாரத திரைப்பிரபலங்கள் பலர் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றனர். இவ்விழாவில் நடிகர் ஆர்.மாதவன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபக்ட்’ என்கிற திரைப்படம் திரையிடப்பட்டது. இப்படம் நாடு முழுவதும் வரும் ஜூன் 1ம் தேதி திரையிடப்பட உள்ளது. இப்படத்தில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்துள்ளார். இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் மாதவன், “பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் டிஜிட்டல் பொருளாதார நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் கரன்ஸியை அறிமுகப்படுத்தினார். அப்போது, பொருளாதார நிபுணர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஒரு விவசாயிக்கும், படிக்காத ஏழை, எளிய மக்களுக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றியும், ஆன்லைன் கணக்கு பற்றியும் எப்படி சொல்லித் தரப்போகிறீர்கள் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த முயற்சி பாரதத்தின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பேரழிவைத் ஏற்படுத்தும் என்றும் பேசப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகளில் ஒட்டுமொத்த கதையே மாறிவிட்டது. தற்போது, டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பயன்படுத்துவதில் உலகிலேயே பாரதம் தான் முதலிடத்தில் உள்ளது. இது ஏன் நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில், பாரத விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி கற்றுத்தர வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. இதுதான் புதிய பாரதம்” என்று கூறினார். மாதவனின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.