கட்டாய மதமாற்றத்தால் நாட்டுக்கே ஆபத்து: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

0
286

புதுடெல்லி: கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்சினை. இதை தடுத்து நிறுத்தாவிட்டால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கட்டாய மதமாற்றம் தொடர்பாக அஸ்வினி குமார் உபாத்யாய என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “அச்சுறுத்தியும், பரிசுகள், பணப் பலன்கள் வழங்கி ஏமாற்றியும் நாட்டில் மத மாற்ற மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த, கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

அவரது மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஹிமா கோலி ஆகியோரது அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள், “கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமானப் பிரச்சினை. இதை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கட்டாய மதமாற்றத்தை தடுத்து நிறுத்தாவிட்டால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்” என்று தெரிவித்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், “மத்திய அரசு தரப்பில் என்ன நடவடிக்கைகளை முன்வைக்கப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அரசியல் நிர்ணய சபையில் கூட இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. வஞ்சகம், மோசடி, பணம் போன்ற வற்றால் கட்டாய மதமாற்றம் செய்யப் படுவதைத் தடுக்க, ஒடிசா மற்றும் மத்திய பிரதேசத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு வந்துள்ளன. அந்த சட்டங்கள் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.

பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் கட்டாய மத மாற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் கிரிமினல் குற்றத்துக்கு உட்பட்டவர்கள் என்பதை பல நேரங்களில் அறிந்திருப்பதில்லை. தங்களுக்கு தொடர்ந்து உதவிகள் கிடைப்பதாகவும் அவர்கள் கூறு கின்றனர்” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது, “மத சுதந்திரம் இருக்கலாம். ஆனால், கட்டாய மதமாற்றம் போன்ற, அளவுக்கு அதிகமான மத சுதந்திரம் கூடாது. கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்சினை. இது, தேசத்தின் பாதுகாப்பையும், மத சுதந்திரத் தையும், குடிமக்களின் மனசாட்சியையும் பாதிக்கலாம். எனவே, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும்” என்றனர்.

மேலும், வரும் 22-ம் தேதிக்குள் மத்திய அரசு இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here