ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷனின், 16வது தலைவராக இருந்தவர் ஸ்மணானந்தஜி மகாராஜு. இவர் மார்ச், 26ம் தேதி காலமானார். இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான அறங்காவலர் குழு மற்றும் மிஷன் நிர்வாக குழு கூட்டம், கோல்கட்டா பேலுார் மடத்தில், 24ம் தேதி நடந்தது.
இதில் மடத்தின், 17வது தலைவராக சுவாமி கவுதமானந்தஜி மகராஜ், 96, தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். இவர், 1929ல் பெங்களூரில் பிறந்தார். இவரது முன்னோர் வேலுார் மாவட்டம், கேத்தாண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள். இளமை காலத்தில், சுவாமி யதீஸ்வரானந்த மகராஜ் தலைவராக இருந்த ராமகிருஷ்ண இயக்கத்தின் பெங்களூரு கிளையுடன் தொடர்பு கொண்டார்; 1955ல்மந்திர தீட்சை பெற்றார். அடுத்த ஆண்டு குருவின் ஆலோசனைப்படி, ராமகிருஷ்ணா மிஷனின் புதுடில்லி மையத்தில் சேர்ந்து துறவற வாழ்க்கை ஏற்றார். 1962ல் சுவாமி விசுத்தானந்தஜி மகராஜிடம் பிரம்மச்சரிய தீட்சை பெற்றார். கடந்த, 1966ல் ராமகிருஷ்ண இயக்கத்தின், 10வது தலைவரான சுவாமி வீரேஸ்வரானந்த மகராஜிடம் சந்நியாச தீட்சையும், சுவாமி கவுதமானந்தர் என்ற துறவற நாமத்தையும் பெற்றார்.
ராமகிருஷ்ண மடத்தின் அறங்காவலராகவும், மிஷனின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், 1990ல் பொறுப்பேற்றார். 1995ல் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக பொறுப்பேற்றார். புதுச்சேரி, ஆந்திராவில் கடப்பா, திருப்பதி, தமிழகத்தில் செங்கம், தஞ்சை, திருமுக்கூடல், விழுப்புரம் போன்ற இடங்களில் மடம் மற்றும் மிஷனின் புதிய கிளைகளை துவக்க பாடுபட்டார். பக்தர்களுக்கு தீட்சை வழங்க அறங்காவலர்கள் அளித்த அங்கீகாரத்தை தொடர்ந்து, 2012ம் ஆண்டு ஆன்மிகப் பணியை துவக்கினார். 2017ல் இயக்கத்தின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.