இஸ்ரேலில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது. இது ஒமைக்ரானின் 2 துணை வகைகள் இணைந்து புதிய வைரஸ் தோன்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் 2 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்திற்கு வந்த 2 பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த புதிய வகை வைரஸ் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த மாறுபாடு இன்னும் உலகம் முழுவதும் கண்டறியப்படவில்லை என்று இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதற்கு முன்பு டெல்டா வகை மற்றும் ஒமைக்ரான் வைரஸ் இணைந்து “டெல்டாக்ரான்” உருவானதுபோல் ஒமைக்ரானின் வைரசின் துணை வகைகளான பி.ஏ.-1 மற்றும் பி.ஏ.-2 ஆகியவை இணைந்து புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது.
குறைந்த காய்ச்சல், உடல்வலி மற்றும் தலைவலி ஆகியவை புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டின் லேசான அறிகுறிகளாகும். இந்த மாறுபாட்டால் ஏற்படும் நோய்க்கு சிறப்பு சிகிச்சை தேவையில்லை என்று கூறப்பட்டு உள்ளது.