தேசிய பணமாக்கல் திட்டம்; காரணம் என்ன?

0
547

நாடு எங்கிலும் வருவாய், கொரோனாவால், பெரும் அளவில் குறைந்து உள்ளது. தனி நபர் வருமானம் மட்டுமல்லாமல், அரசிற்கும் பெருமளவில் வருவாய் குறைந்து உள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில், மத்திய அரசு, மக்களின் துயர் துடைக்க, பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

“சுயசார்பு பாரதம்” (Aatma Nirbhar) திட்டத்திற்காக, மத்திய அரசு  20 லட்சம் கோடியை ஒதுக்கியது. வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் மக்கள் அனைவரும், பசியின்றி உணவருந்த ஏதுவாக, “பிரதமர் அன்ன யோஜனா” (PM Anna Yojana) திட்டத்திற்கு, 1.7 லட்சம் கோடியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதன் மூலமாக, நமது நாட்டில் உள்ள, 80 கோடி மக்களுக்கும், உணவு தானியங்கள் கிடைத்ததுடன், தங்களுடைய பசியைப் போக்க ஏதுவாக இருந்தது.

பல கோடி ரூபாய் செலவு செய்த மத்திய அரசிற்கு, பணம் அதிகம் தேவைப் பட்டது. அதற்காக, மக்களுக்கு வரி சுமையை அதிகரிக்காமல், புதிய திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்து, “தேசிய பணமாக்கல்” (Monetization) திட்டத்தின் மூலம், அடுத்த நான்கு வருடங்களில் (2022 – 2025), மத்திய அரசு 6 லட்சம் கோடி வருவாயை ஈட்ட, முடிவு செய்து உள்ளது.

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:

  • அரசு சொத்துக்களை, தனியாருக்கு, குறிப்பிட்ட காலம் (2022 – 2025) வரை, குத்தகைக்கு (Lease) விடுவது.
  • அதன் உரிமையாளராக, மத்திய அரசாங்கமே இருக்கும். சில காலங்கள் மட்டுமே, வாங்கிய தனியார் நிறுவனத்தினர், அதை அனுபவிக்க முடியும்.
  • குத்தகை காலம் முடிந்தவுடன் மீண்டும் அதை மத்திய அரசிற்கு ஒப்படைக்க வேண்டும்.
  • இதன் மூலம், அரசாங்கத்திற்கு நிலையான வருவாய் வரும்.
  • இதில் இருந்து கிடைக்கும் வருமானம் மூலமாக, உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி, மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவு செய்ய, மத்திய அரசு தீர்மானித்து உள்ளது.
  • சாலைப் போக்குவரத்து துறை, விமானம் துறை, கப்பல் துறை, இயற்கை எரிவாயுத் துறை, தொலைத் தொடர்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுற்றுலாத் துறை போன்ற துறைகளின் மூலமாக, மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் அவர்களின் தனிநபர் வருமானமும் மேம்படும்.

மத்திய அரசு வருவாயை ஈட்ட திட்டமிட்டுள்ள துறை:

  • சாலைப் போக்குவரத்து – ரூ.1,60,200 கோடி
  • ரயில்வே – ரூ.1,52,496 கோடி
  • மின்சாரப் பரிமாற்றம் – ரூ.45,200 கோடி
  • மின்சார உற்பத்தி – ரூ.39,832 கோடி
  • தொலைத் தொடர்பு – ரூ.35,100 கோடி
  • கிடங்கு – ரூ.28,900 கோடி
  • சுரங்கம் – ரூ.28,747 கோடி
  • இயற்கை எரிவாயு – ரூ.24,462 கோடி
  • இதர குழாய் மற்றும் சொத்துக்கள் – ரூ.22,504 கோடி
  • விமானப் போக்குவரத்து – ரூ.20,782 கோடி
  • நகர்ப்புற நிலம் (நகரம் ரியல் எஸ்டேட்) – ரூ.15,000 கோடி
  • துறைமுகம் – ரூ.12,828 கோடி
  • விளையாட்டு அரங்கம் – ரூ.11,450 கோடி


விகிதாச்சாரம் வாரியாக :

  • சாலைப் போக்குவரத்து – 27%
  • ரயில்வே – 25%
  • மின்சாரப் பரிமாற்றம் – 8%
  • மின்சார உற்பத்தி – 7%
  • தொலைத் தொடர்பு – 6%
  • கிடங்கு – 5%
  • சுரங்கம் – 5%
  • இயற்கை எரிவாயு  – 4%
  • இதர குழாய் மற்றும் சொத்துக்கள் – 4%
  • விமானப் போக்குவரத்து – 3%
  • நகர்ப்புற நிலம் (நகரம் ரியல் எஸ்டேட்) – 2%
  • துறைமுகம் – 2%
  • விளையாட்டு அரங்கம் – 2%

சொத்துக்கள் இரண்டு வகை:
“கிரீன் பீல்ட்” (Green Field), “பிரவுன் பீல்ட்” (Brown Field) என சொத்துக்களை இருவகைப் படுத்தலாம்.

‘கிரீன் பீல்ட்’ என்பது காலி நிலம் போன்றவை,

‘பிரவுன் பீல்ட்’ என்றால், ஏற்கனவே இருக்கிற கட்டிடங்கள் , பயன் படுத்தப்படாத அல்லது குறைவாகவே பயன்பாட்டில் உள்ள கட்டிடங்கள் ,தேவைக்கு அதிகமாக இருக்கும் அலுவலக இடங்கள்.

பிசிராந்தையார் பாடிய புறநானூறுப் பாடல்:

 “காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே

மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;

நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே

வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே

கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்

யானை புக்க புலம்போலத்

தானும் உண்ணான் உலகமும் கெடுமே”

வரி எப்படி வசூலிக்க வேண்டும் என்ற முறையை, எளிமையாக, இந்தப் புறநானூறுப் பாடலில் விளக்கப்பட்டு உள்ளது.

பாடலின் விளக்கம் : விளைந்த நெல்லை அறுத்து, உணவுக் கவளங்களாக்கி, யானைக்கு ஊட்டினால், அது யானைக்கு உணவாக, பல நாட்களுக்கு வரும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், நெல் வயலில் புகுந்து, யானை தானே தின்றால், யானை தின்பதை விட, யானையின் கால்களால் மிதிபட்டு, அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.

அறிவுடைய அரசன், வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடம் இருந்து வரி திரட்டினால், நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும்.

வீடு – வாடகை:

பிசிராந்தையார், இந்தப் பாடல் வரிகளில்  கூறியது போல, மத்திய அரசு நல்ல திட்டங்களை செயல் படுத்தி, அதன் மூலமாக இந்திய மக்களுக்கு வலிக்காமல், பணம் சம்பாதிக்க முயன்று வருகின்றது. இது போன்ற நிகழ்வுகளை, நமது அன்றாட வாழ்வில், நாம் அனைவரும் கடைபிடிக்கும் நடைமுறை என்றால், அது மிகையல்ல.

உதாரணத்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிலத்தின் உரிமையாளர், அந்த காலி இடத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி, அதனை பலருக்கும் வாடகைக்கு விடலாம். அதில் குடியேறுபவர்கள், இருக்கும் காலம் வரையில், அதற்கு உண்டான தொகையைக் கொடுத்து, பயன் படுத்திக் கொள்ளலாம். அவருடைய, குத்தகை கால அளவு முடிந்தவுடன், அங்கிருந்து வெளியேறி விடுவார். அவர் இருக்கும் காலம் வரையில், அதனைத் தனது சொத்து போல பராமரித்துக் கொள்வார்.

எப்படி ஆயினும், அந்த இடம், நிலத்தின் உரிமையாளருக்கு தான் சொந்தமாக இருக்குமே தவிர, எந்த சூழ்நிலையிலும், அங்கு குடி இருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு, உரிமை ஆகாது. எந்தக் காரணத்தைக் கொண்டும், குடியிருப்பு வாசிகள், அதற்கு உரிமை கோரவும் முடியாது.

அவற்றைப் போலவே, மத்திய அரசு, சும்மா இருக்கும் இடங்களை, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும், குத்தகைக்கு விட்டு, அதன் மூலம், தனது வருவாயைப் பெருக்க, இப்படியொரு திட்டத்தை, செயல்படுத்த முனைகிறது.

பல வளர்ந்த நாடுகளிலும், இது போன்ற திட்டத்தை, அந்த அரசு செயல்படுத்தி உள்ளது. அமெரிக்காவில், “இந்தியானா” மாகாணத்தில், சுங்க சாவடி உரிமையை, “Macquarie group” என்ற நிறுவனம் எடுத்ததின் மூலம், 3 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம், அமெரிக்காவிற்கு கிடைத்தது. அந்த வருவாய், இந்தியானா மாகாணத்தில் உள்ள, சாலைகளின் தரம் உயர்த்தப் பட செலவழிக்கப் பட்டது.

ஆஸ்திரேலியாவில் “Asset Recycling Initiative” (ARI) என்ற 5 ஆண்டு கால திட்டத்தின் மூலம், 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்தது. அதை, புதிய உள்கட்டமைப்பு வசதிக்காக செலவு செய்தது.

நமது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை:

கொரோனா தாக்கத்தால், நமது நாட்டின் பொருளாதாரம், கடந்த நிதி ஆண்டில் 24.4 % எதிர் மறையாகச் சென்றது. இந்த நிலையில், மத்திய பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள தரவுகளின் படி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான, 2021-22 ஆண்டின் ஏப்ரல் – ஜூன் வரை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 20.1 சதவிகிதமாக, அதீத வளர்ச்சியை அடைந்து உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (G.D.P.) ரூ.32,38,020 கோடியாக, அதிகரித்து உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில்,  ரூ.26,95,421 கோடியாக இருந்தது.

கொரோனா தாக்கத்தால், பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் முடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவின் தாக்கத்தால், ஏற்பட்ட பொது முடக்கத்தால், மக்கள் வருவாயின்றி அவதிப்பட்டு கொண்டு இருக்கும் இவ்வேளையில், மேலும் வரியை கூட்டாமல், பொது மக்களின் துயர் துடைக்க, மாற்று வழியில் சிந்தித்து, வருவாயை அதிகரிக்க, மத்திய அரசு முயல்வது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது. இதற்காக, மத்திய அரசை பலர் பாராட்டினாலும், எதிர் கட்சிகள், இதனை வைத்தும், அரசியல் செய்வது, பொது மக்களுக்கு, எதிர் கட்சிகள் மீது மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது.

நமது நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியைக் காணும் போது, மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட் டு வருகின்றது. வருவாயை அதிகரிக்க,  மத்திய அரசு  செயல்படுத்தும் திட்டங்களால், வருமானம் மேலும் அதிகரிக்கும். அவற்றின் மூலமாக, நமது நாட்டின் பொருளாதாரம் மேம்படுவதுடன், உட்கட்டமைப்பு வசதிகளையும் பெருக்கிக் கொள்ள முடியும்.

இதன் காரணமாக,  நமது நாடு, “வளர்ந்த நாடாக மாறும்” என்ற நம்பிக்கை,  பொது மக்களுக்கு, மேலும் அதிகரிக்கிறது.

“இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த

 வகுத்தலும் வல்ல தரசு” –  திருக்குறள்

விளக்கம்: பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும், வல்லவன் அரசன்.

அ. ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here