விமானப்படை மற்றும் கடற்படை விரிவுபடுத்தும் புதிய கொள்கையை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டார்.
ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆயுதக் கொள்முதல் குழு உள்ளது. இதைத் தவிர அந்த தடவாளங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் மற்றும் தோட்டாக்கள் போன்றவற்றை வாங்குவதற்காக, ராணுவ உயரதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் கொள்கை 2016ல் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது இந்த அதிகாரம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு புதிய கொள்கையை, ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டார். அதன்படி ராணுவ துணைத் தளபதி உள்ளிட்டோருக்கு, இந்த நிதி அதிகாரம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள நிதி அதிகாரம், 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிகபட்சம், 500 கோடி ரூபாய் வரையே செலவிட முடியும்.
இதைத் தவிர, விமானப் படை மற்றும் கடற்படைக்கும் இந்த அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.’அவசர நிலை, கள நிலவரத்துக்கு ஏற்ப படைப் பிரிவு தளபதிகள் உடனடியாக முடிவு எடுக்க இந்த புதிய கொள்கை உதவும்’ என, ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.