டெல்லியில் ரூசா பப்ளிகேஷனால் வெளியிடப்பட்ட ‘வீர சாவர்க்கர்: உதய் மஹூர்கர் மற்றும் சிராயு பண்டிட் ஆகியோரின் பிரிவினையைத் தடுத்திருக்கக்கூடிய மனிதன்’ என்ற ஆங்கில புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘வீர சாவர்க்கர் ஒரு தேசியவாதி, தொலைநோக்க பார்வையாளர், அவர் கூறிய அனைத்தும் தற்போது உண்மையாகிவிட்டது. பள்ளி நாட்களிளேயே சாவர்க்கர் தாய்நாட்டின் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஹிந்துத்துவா என்பதை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானதாக அவர் பயன்படுத்தவில்லை. அது பாரதத்தின் கலாச்சாரம், நாகரிகத்தை பிரதிபலிக்கிறது. தேசத்தின் நலனே நமது வெளியுறவுக் கொள்கையின் அடித்தளமாக இருக்க வேண்டும் என்றார்.
சுவாமி விவேகானந்தரின் ஹிந்துத்துவா, சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஹிந்துத்துவா என்று பிரித்துப் பேசுவது தற்போது நாகரீகமாகிவிட்டது. ஆனால் இருப்பது ஒரே ஒரு ஹிந்துத்துவா மட்டுமே அதுதான் சனாதன தர்மம்.
அகண்ட பாரதம் உலகின் தேவை. வீர சாவர்க்கர் நாட்டின் ராணுவத்தை வலுப்படுத்தும் கொள்கைகளை வலியுறுத்தினார். அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியும்கூட. அவர், பெண்களுக்கு அதிகாரமளித்தல், கோயில்களில் அனைவரையும் அனுமதிப்பது போன்றவற்றிற்காக பிரச்சாரம் செய்தார். ஜாதி, பாலின அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்த்தார்.
வீர சாவர்க்கரை அவதூறு செய்பவர்கள் அவருடன் நிறுத்திக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் அடுத்த இலக்கு சுவாமி விவேகானந்தர், சுவாமி தயானந்த சரஸ்வதி, அரவிந்தராக இருப்பர். ஏனெனில் சாவர்க்கர் அவர்களிடமிருந்துதான் தனது உத்வேகத்தை பெற்றார்’ என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘தேசம் சுதந்திரம் பெற்ற பிறகு, ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை சேர்ந்தவர்கள், சாவர்க்கரை குறித்து வதந்திகளைப் பரப்பினர். அவர் பலவீனமானவர், ஆங்கிலேயர்களிடம் கருணையை வேண்டினார் என பொய்களை பரப்பினர். ஆனால், சாவர்க்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மகாத்மா காந்தியின் ஆலோசனையின்படியே கருணை மனுத் தாக்கல் செய்தார். தற்போது, வீர சாவர்க்கர் குறித்த உண்மைகள் வெளியாகி வருகின்றன. தேசிய நலனே நமது வெளியுறவுக் கொள்கையின் மையமாக இருக்க வேண்டும். நமது தேசிய இலக்குகளை அடைய உதவி செய்தால் மட்டுமே எந்த நாடும் நண்பராக கருதப்பட வேண்டும் என்றார் சாவர்க்கர்’ என கூறினார்.