வி.ஹெச்.பி செயல் தலைவர் அலோக் குமார், டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் “பாரதத்தின் பொதுவான கலாச்சாரம் மற்றும் அதை எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார். கோவிந்த் சதன் இன்ஸ்டிடியூட் ஃபார் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் அமைப்பால் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் உரையாற்றிய அலோக் குமார், “சீக்கிய குருக்களான குரு தேக் பகதூர் ஜி மற்றும் குரு கோவிந்த் சிங்ஜி போன்றவர்கள் சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்களால் சமமாக மரியாதையுடன் போற்றப்படுகிறார்கள். நமது தாய்நாட்டின் ஒற்றுமை, சுதந்திரம் மற்றும் கலாச்சாரத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த சீக்கிய குருமார்களுக்கு மரியாதை செலுத்துவதை குறைமதிப்பிற்கு உட்படுத்தவோ அல்லது பலவீனப்படுத்தவோ அனுமதிக்க மாட்டோம். நாம் வெவ்வேறு நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு முறைகளை கூறினாலும் ஒற்றுமையாக இருக்க தர்மம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. பாரதத்தில் பிறந்த ஒவ்வொரு சம்பிரதாயமும் மக்கள் மற்றும் தாய்நாட்டின் அடிப்படையான ஒற்றுமையை எப்போதும் பறைசாற்றுகிறது இந்த பந்தம் என்றும் பிரிக்க முடியாதது” என கூறினார்.
ஹரித்வாரில் உள்ள பஞ்சாயத்து நிர்மல் அகடாவைச் சேர்ந்த மஹந்த் கியான்தேவ் மகாராஜ் தனது உரையில், “சமூகம் மற்றும் நாட்டுக்காக; தாய்நாட்டின் பலிபீடத்தில் தங்கள் மூன்று தலைமுறைகளைத் தியாகம் செய்யத் தயங்காத சீக்கிய குருக்களின் போதனைகளை எடுத்துச் சென்று மக்களை ஊக்கப்படுத்துவது நமது கடமையாகும்” என்றார். மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி கூறுகையில், “பாரதிய சமுதாயமும், தர்மத்தின் மீதான நம்பிக்கையும் மனிதகுலத்தின் நலனுக்காகவே உள்ளது. உலக சமூகம் இந்த உண்மையை உணர்ந்துள்ளது. ‘வசுதைவ குடும்பகம்’ (உலகம் முழுவதுமே ஒரு குடும்பம்) என்ற செய்தி நமது தாய்நாட்டில் இருந்து பரவியதில் நாம் பெருமை கொள்கிறோம்” என்றும் கூறினார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் பேசுகையில், “சுடுகாடுகள் மற்றும் குருத்வாராக்கள் ஜாதி மற்றும் குல அடிப்படையில் பிரிக்கப்பட்டு உள்ள வரை, சமத்துவ அடிப்படையிலான சமுதாயத்தை உருவாக்கும் குருமார்களின் நோக்கம் நிறைவேறாது” என கூறினார். இவர்களைத் தவிர, பாட்னா சாஹிப் கியானி இக்பால் சிங் ஜாதேதார், சர்ஹாலியின் பாபா ஹகம் சிங், தேசிய சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் சர்தார் மஞ்சித் ராய் சிங் ராய், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் உறுப்பினர் டாக்டர். சுர்ஜித் கவுர் ஜோலி உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.